தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த குறைகளை உடனுக்குடன் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், புதிய கட்டணமில்லா தொலைபேசி (Toll-Free) எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் பொதுமக்களுக்கான குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் தங்கு தடையின்றி, போர்க்கால அடிப்படையில் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், மாநகராட்சியின் இந்தச் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது தினசரி பராமரிப்புப் பிரச்சனைகள் இருந்தால், பொதுமக்கள் அது குறித்துப் புகார் அளிக்க தங்களது வார்டு கவுன்சிலர்களையோ அல்லது மாநகராட்சி அலுவலகங்களையோ தேடி அலைந்து நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதற்காகவே, மாநகராட்சி அலுவலகத்தில் பிரத்தியேகமாக 1800 203 0401 என்ற புதிய கட்டணமில்லாத் தொலைபேசி (Toll-Free) வசதி தற்பொழுது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை, தெருவிளக்குகள் எரியாதது அல்லது சாக்கடை நீர் தேங்குதல் போன்ற எந்தவொரு சுகாதாரப் பிரச்சினையாக இருந்தாலும், பொதுமக்கள் உடனடியாக 1800 203 0401 என்ற இந்த டோல் ஃப்ரீ எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இதன் மூலம் தங்களது புகார்களைப் பதிவு செய்து, அதற்கான தீர்வுகளை விரைவாகப் பெற்றுப் பயனடையுமாறு மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்