தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில், அரிசிக் கடையில் சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோ புகையிலைப் பொருட்களும், 10,000 ரூபாய் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமலெட்சுமி தலைமையிலான போலீஸார் இன்று (17.05.2026) அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள ஒரு அரிசிக் கடையின் முன்பு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த வீரசின்னரசு (38) மற்றும் மாரிமுத்து (46) என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரும், அந்தக் கடையின் உரிமையாளரான குளத்தூரைச் சேர்ந்த பிச்சைமணி (61) என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வாங்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் அந்த அரிசிக் கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில், சட்டவிரோத விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட  30 கிலோ 475 கிராம் புகையிலைப் பொருட்கள், ரொக்கப் பணம் ரூ.10,000 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அரிசிக் கடை உரிமையாளர் பிச்சைமணி மற்றும் புகையிலைப் பொருட்களை வாங்க வந்த வீரசின்னரசு, மாரிமுத்து ஆகிய 3 பேரையும் குளத்தூர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.