தேர்தல் நடக்க இன்னும் 3 நாட்களே உள்ளது. நாளையோடு பிரச்சாரம் முடிகிறது. தேர்தல் பிரச்சார களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தூத்துக்குடி தொகுதியில் வெற்றி யார் பக்கம் என்ற கணிப்புகளின் காற்றுகளும் திசைமாறி வீசத்தொடங்கி இருப்பதையும் காண முடிகிறது.

தமிழகத்தில் பிற கட்சிகளைத் தாண்டி நடிகர் விஜய் இந்தத் தேர்தலில் ஒரு மாற்றுச் சக்தியாக இருப்பார் என்று கணிக்கக் கூடிய அளவுக்கு அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தமிழகம் முழுக்க பரவலான ஒரு வரவேற்பு உள்ளதைக் காண முடிகிறது. இளம் தலைமுறை மத்தியில் அவர் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார்.

2026 தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும், தமிழக அரசியல் வரைபடத்தில் தவெக ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதை மட்டும் மறுக்க முடியாது. மொத்தத்தில் தவெக விஜய் திமுகவை விட, அதிமுகவைத்தான் அதிகம் பதம் பார்க்கப்போகிறாராம். அதேபோல் அதிமுகவின் இரண்டாம் இடத்தை கூட பல இடங்களில் அவர் தட்டிப்பறிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதைத் நிரூபிக்கும் வகையிலே தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி இறுதிகட்ட களநிலவரம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, தூத்துக்குடியை கடந்த முறை போல இந்த முறையும் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் தட்டிப்பறிப்பார் என்றும், இரண்டாம் இடத்தை பிடிக்க அதிமுக - தவெக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது என்பதே களநிலவரத்தின் எதார்த்தமாக உள்ளது.

வெளியூர் வேட்பாளர், அவர் பெரிய அளவிற்கு தொகுதி மக்களிடம் எந்த அடையாளமும் இல்லாதவர் என்று தூத்துக்குடி தொகுதி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை தளபதி விஜய் முதல்வர் ஆக வேண்டும். அவரது விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள், தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு தங்களது தவெக வேட்பாளர் யார் என்ற தேடுதல் தேவையே இல்லை என்கின்றனர். அந்த அடிப்படையில் தவெகவில் யார் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்பதில் பெரிய சிக்கல் இல்லாததால், 20 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் குறிப்பாக பெண்களின் ஏகோபித்த ஆதரவு தவெகவிற்கு உள்ளது. ஆகவே, தூத்துக்குடியில் தவெக கணிசமாக 30 முதல் 40 வரை வாக்குகள் வாங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், கட்சி தலைமையிடம் அடம் பிடித்து சீட் வாங்கியதில் காட்டிய ஆர்வத்தை, தேர்தல் களத்தில் சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்வதில் காட்ட தவறியது அவருக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும், வாக்காளர்களை அன்பாக கவனிப்பதிலும் உட்கட்சி பூசலால் தடுமாற்றம் அடைந்துள்ளார். ஆகவே, அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தரப்பு மே 4ஆம் தேதி கன்னத்தில் கை வைத்து சாயும் நிலைக்கு தள்ளப்படலாம்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் இறுதிகட்ட கள நிலவரப்படி 2 வது இடத்தை பிடிப்பதற்கே அதிமுக கடுமையாக போராடிவரக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் உள்ளூர் தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பரப்புரைக்காக தூத்துக்குடி பாளைரோடு விவிடி சிக்னல் பகுதிக்கு வந்த தவெக தலைவர் விஜய்க்காக கூடிய கூட்டத்தை பார்த்து ஒரு கனம் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக என இரு திராவிட கட்சி வேட்பாளர்களும் சற்று ஆடித்தான் போனார்களாம். காரணம், தவெக வின் வாக்கு யாருடைய வாக்கை பிரிக்க காத்திருக்கிறது என்பது தான். ஆனால், அவை அதிமுகவின் வாக்கு வங்கியை பிரித்து, 2 வது இடத்திற்கு தவெக முன்னேறி வருவது அதிமுகவிற்கு கலக்கத்தையும், திமுகவிற்கு நிம்மதியையும் தந்துள்ளது.