தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும், தவெக வேட்பாளா்களை ஆதரித்து இன்று புதன்கிழமை (ஏப்.8) தவெக தலைவா் நடிகா் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறாா்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தரும் தவெக தலைவரும் நடிகருமான விஜய், திருநெல்வேலியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா்.

பின்னா், தூத்துக்குடி வரும் அவா், விவிடி சிக்னல் அருகே மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறாா்

மேலும், துாத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பல்வேறு தேர்தல் நிபந்தனைகள் மற்றும் கட்டுபாடுகளுடன் விஜய் பிரச்சாரம் தொடர்பாக அளித்துள்ள அனுமதியில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேர்தல் நடத்தை விதிகள்:

மற்ற அரசியல் கட்சிகளையோ அல்லது வேட்பாளர்களையோ தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது.

மத, ஜாதி ரீதியான உணர்வுகளைத் தூண்டும் வகையில் முழக்கமிடவோ, பேனர் வைக்கவோ கூடாது.

தேர்தல் பிரச்சாரத்திலோ அல்லது சாலை நிகழ்ச்சியிலோ குழந்தைகளை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது.

வாக்காளர்களுக்குப் பணம், மது அல்லது பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வது கண்டறியப்பட்டால் அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும்.

சாலையின் சென்டர் மீடியன்களில் கட்சி சார்ந்த கொடிகள் மற்றும் பேனர்கள் அமைக்க அனுமதி கிடையாது.

சாலை நிகழ்ச்சியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமான நபர்கள் கலந்த கொள்ள அனுமதி இல்லை.

பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் சாலை நிகழ்ச்சியில் பயன்படுத்தக்கூடாது.

வாகன அணிவகுப்பு நிபந்தனை :

சாலை நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் கான்வாய் ஒவ்வொரு 10 வாகனங்களுக்குப் பின் பிரிக்கப்பட வேண்டும்.

இரண்டு கான்வாய்களுக்கு இடையில் 100 மீட்டர் இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும்.

1X /2 அடி அளவுள்ள ஒரு கொடி மட்டுமே பிரச்சார வாகனங்களில் அனுமதிக்கப்படுகிறது.

கால அளவு மற்றும் பாதை:

சாலை நிகழ்ச்சி காவல்துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் பாதையை மாற்றக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் (மாலை 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை) சாலை நிகழ்ச்சியினை முடித்துக்கொள்ள வேண்டும்.

சாலை நிகழ்ச்சிக்காக வரும் அனைத்து வாகனங்களும், அதற்கென ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும்.

அங்கீகரிக்கப்படாத இடங்களிலோ அல்லது சாலையோரங்களிலோ வாகனங்களை நிறுத்தி, பொதுப் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

பொதுப் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கு, சாலை நிகழ்ச்சியானது சாலையின் பாதி அளவைத் தாண்டாதவாறு அமைய வேண்டும்.

சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு: ·

சாலை நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்துக்கோ எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது. மேலும், மருத்துவமனைகள், இரத்த சேமிப்பு வங்கி, அதிக கூட்ட நெரிசல் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்.

சட்ட மற்றும் ஒழுங்கிற்குப் பாதகம் விளைவிக்கும் பொருட்களைப் சாலை நிகழ்ச்சியில் எடுத்துச் செல்லக் கூடாது. சாலை நிகழ்ச்சியில் எவ்வளவு நபர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து முன்னதாகவே காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

முக்கிய தலைவர் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை பிரச்சாரம் செய்வார்கள் என்பது குறித்து முன்னதாகவே காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

தேவைப்படும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு முக்கிய மற்றும் முன்னெச்சரிக்கை தகவல்களை தெரிவிக்கும் வகையில் போதிய PA System வசதிகள் செய்திருக்க வேண்டும்.

ஏதேனும் அவசர சூழ்நிலைகள் ஏற்படும்பட்சத்தில் மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வசதி மற்றும் இதரவைகளுக்கு யார் பொறுப்பாளர் என்ற விபரத்தினை முன்னதாகவே காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

நிகழ்ச்சி தொடர்பாக காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை யாரை தொடர்புகொண்டு முக்கிய விபரங்களை கேட்பது/தெரிவிப்பது என்பது குறித்து முன்னதாகவே காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

சாலை நிகழ்ச்சியின் போது, காவல்துறையினரின் வழிகாட்டுதல் மற்றும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

தன்னார்வலர்கள் மற்றும் நெரிசல் மேலாண்மை:

சாலை நிகழ்ச்சியின் போது கூடும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த அடையாள அட்டை அணிந்த தன்னார்வலர்களை (Volunteers) நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நியமிக்க வேண்டும்.

சாலை நிகழ்ச்சியின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றிற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே முழுப்பொறுப்பாவார்.

பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பாவார். மேலும், அச்சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு அவரே இழப்பீடு வழங்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்கள், நீண்ட நேரம் நிற்க வைக்கப்படாமல் இருப்பதையும், அதிகக் கூட்டம் நிறைந்த பகுதிகளுக்குள் தள்ளப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மீளமைப்பு

சாலை நிகழ்ச்சி முடிந்த உடனேயே, சுத்தம் செய்தல் மற்றும் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு நிகழ்விடம் அதன் பழைய நிலைக்குத் திரும்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கண்காணிப்பு மற்றும் தேர்தல் செலவுக் கணக்கு:

தேர்தல் பறக்கும் படையினர் (FST) மற்றும் வீடியோ நிலையான கண்காணிப்புக் குழுவினரால்(VST) வீடியோ பதிவு செய்யப்பட்டு சாலை நிகழ்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

சாலை நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், எரிபொருள், பேனர்கள், கொடிகள், மற்றும் அனைத்து செலவுகளும் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.

தற்போது சட்டமன்ற தேர்தல்-2026 நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருவதால் தேர்தல் ஆணையத்தின் அனைத்து உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை தவறாது கடைபிடிக்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தூத்துக்குடி தமிழக வெற்றி கழக மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ் என்பவருக்கு 08.04.2026 அன்று மாலை 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 3வது மைல் பகுதியில் இருந்து VVD சிக்னல் வரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் என்பவர் தலைமையில் சாலை நிகழ்ச்சி (Road Show) நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது. மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டாலோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவ சட்டக்கூறுகள் மீறப்பட்டாலோ, இந்த அனுமதி எவ்வித முன்னறிவிப்புமின்றி உடனடியாக ரத்து செய்யப்படும் என்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. என துாத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.