காச்சிகுடா - தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் சேவை நாளை ஏப்ரல் 8, 2026 முதல் (புதன்கிழமை) தூத்துக்குடியில் இருந்து தொடங்குகிறது.

பயணிகளின் வசதிக்காக, தற்போது சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் காச்சிகுடா – மதுரை ரயிலை, நிரந்தர விரைவு ரயிலாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இனி இந்த ரயில் "காச்சிகுடா – தூத்துக்குடி விரைவு ரயில்" என்ற பெயரில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும் எனவும் அதற்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டது.

அதன்படி,  காச்சிகுடா – தூத்துக்குடி காச்சிகுடாவில் இருந்து ஏப்ரல் 6, 2026 முதல் (திங்கட்கிழமை), தூத்துக்குடியில் இருந்து ஏப்ரல் 8, 2026 முதல் (புதன்கிழமை) தொடங்குகிறது. காச்சிகுடாவில் இருந்து திங்கட்கிழமைகளிலும், மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து புதன்கிழமைகளிலும் இந்த ரயில் வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படுகிறது.

இந்த ரயில் காச்சிகுடாவில் திங்கள் மதியம் 3.00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (செவ்வாய்) இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடி வருகிறது. மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து புதன் காலை 07.40 மணிக்குப் புறப்பட்டு, வியாழன் மதியம் 1.25 மணிக்கு காச்சிகுடா சென்றடைகிறது.

தமிழகத்தில் வேலூர் கண்டோன்மென்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போர்ட், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய முக்கிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது.

இந்த ரயில் நாளை ஏப்ரல் 8, 2026 முதல் (புதன்கிழமை) தூத்துக்குடியில் இருந்து தனது முதல் சேவையை தொடங்குகிறது. இந்த ரயில்  சேவை, தென் தமிழக மக்கள் தெலங்கானா மாநிலத்திற்கு எளிதாகப் பயணம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.