தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ( தனி ) உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஆளும் கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்கட்சியான அதிமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டிடப்போகிறது, எந்தெந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன, எந்தெந்த தொகுதிகளில் யார் வேட்பாளர் என்ற ஆர்வமே தற்போது மாவட்ட அரசியலில் பெரும் பேசு பொருளாக உள்ளது.

இதில் திமுக சார்பில் திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரத்தில் சண்முகையா விளாத்திகுளத்தில் மார்கண்டேயன் ஆகியோர் 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

அதே போல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் அவர்களுக்கே கட்சி தலைமை வாய்ப்பு வழங்கும் என்றும், அவர்களுக்கான வெற்றி வாய்ப்பிலும் எவ்வித சிக்கலும் இல்லாமல், கடந்த தேர்தல் போலவே மீண்டும் வெற்றி பெறுவார்கள் என்றும் அதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் உள்ளூர் அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

அதிமுக சார்பில் கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூவும், ஸ்ரீவைகுண்டத்தில் சண்முகநாதனும் அதிமுக சார்பில் போட்டியிடுவதில் எந்த குழப்பமும் இருக்காது, கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றது எனவும், கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ஊர்வசி அமிர்தராஜ் மீதான அதிர்ப்தியும், அதிமுக கூட்டணியில் அமமுக வின் வருகையின் பலத்தாலும் இந்த முறை ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுகவே வெற்றி பெறுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் உள்ளூர் அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

அதிமுக சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்ல பாண்டியனும், ஓட்டப்பிடாரத்தில் கூட்டணியில் அமமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜூம், விளாத்திகுளம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அல்லது முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவும் போட்டியிடலாம் என்றும், இவர்களுக்கான வெற்றி வாய்ப்பு என்பது சவலாகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இருப்பினும், திமுக மற்றும் அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கூடும் வேட்பாளர்கள் யார் என்ற உறுதியான தகவல் இன்னும் ஓரிரு நாட்களிலும், யார் வெற்றி பெறுவார்கள் என்பது மே 4 ஆம் தேதியும் உறுதியாக தெரிந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.