அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள்  பெயரை தவறாக பயன்படுத்தி, அவர்கள் ஆதரவு கொடுப்பதாக கூறி திமுகவை சேர்ந்த ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக தேர்ந்தெடுப்பதற்காக , நம்பிக்கையில்லா தீர்மானத்தை மோசடியாக  செயல்படுத்த முயற்சிக்கும் திமுகவினரின் செயல்களை தடுத்து நிறுத்தக்கோரி  அதிமுக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தலைமையிலான அவரது ஆதரவு மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சியில்  நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு மாவட்ட மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது.

இந்நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒவ்வொருவராக திமுக பக்கம் தாவத்தொடங்கிய சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்ட மற்றும் ஒன்றிய குழு தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றும் பணியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,  திமுக நிர்வாகிகள் ஈடுபட்டுவருதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில், அதிமுகவைச் சேர்ந்த கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், தேமுதிக கவுன்சிலர் நிர்மலா அழகர் சாமி,  அதிமுக மாவட்ட கவுன்சிலர் சந்திர சேகர், தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் அழகர் சாமி உள்ளிட்டோர் அண்மையில் திமுகவில் சேர்ந்தனர்.

மேலும் சில யூனியன் கவுன்சிலர்களும், மாவட்ட கவுன்சிலர்களும், கட்சி நிர்வாகிகளும் அதிமுக உள்ளிட்ட பிற கட்சியில் இருந்து விலகி திமுகவிற்கு படையெடுப்பதற்கு தயாராகி வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முக நாதன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோருடன் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சத்யா மற்றும் அவரது ஆதரவு மாவட்ட கவுன்சிலர்களான ஞானகுருசாமி ( வார்டு 1 ) , நடராஜன் ( வார்டு 3 ), பிரியா ( வார்டு 6 ), தேவராஜ் ( வார்டு 8 ), அழகேசன் ( வார்டு 12 ), பேச்சியம்மாள் ( வார்டு 13 ), தேவ வின்னரசி ( வார்டு 17 ) உள்ளிட்டோர் இன்று( 21.6.2021) மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை நேரில் சந்தித்து, அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள்  பெயரை தவறாக பயன்படுத்தி, ஆதரவு கொடுப்பதாக கூறி திமுகவை சேர்ந்த ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக தேர்ந்தெடுப்பதற்காக , நம்பிக்கையில்லா தீர்மானத்தை மோசடியாக  செயல்படுத்த முயற்சிக்கும் திமுகவினரின் செயல்களை தடுத்து நிறுத்தக்கோரி மனு அளித்தனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.