எட்டையபுரம் அருகே உள்ள குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தித் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். இது குறித்துத் தகவலறிந்த இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், கிராமத்திற்கு நேரில் சென்றார். அவருடன் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், எட்டையபுரம் நகரத் தலைவர் மலர்கண்ணன் மற்றும் கோவில்பட்டி நகரத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் சென்றிருந்தனர்.

மக்களைச் சந்தித்த நிர்வாகிகள், "ஜனநாயகக் கடமையான வாக்களிப்பைப் புறக்கணித்தது வருத்தத்திற்குரியது" என்று தெரிவித்தனர். இருப்பினும், மக்கள் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்பது குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். அப்போது , நிர்வாகிகளிடம் கிராம மக்கள் தெரிவித்த புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, அப்பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருப்பவர்கள், குளத்துள்வாய்பட்டியைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவர் மீது கொடூரமான முறையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், வழக்குப் பதிவு செய்ய போலீசார் மறுப்புத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கிராமத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்குத் தீர்வு காண அரசு அதிகாரிகளோ அல்லது காவல்துறையினரோ முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கிராமத்தின் பாதுகாப்புக் கேள்விக்குறியாக உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் தீர்வு கிடைக்காததாலேயே, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கத் தேர்தலைப் புறக்கணித்தோம் என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாகத் தலையிட்டால் மட்டுமே தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும், சமூகச் சீர்குலைவைத் தடுத்து அமைதியான சூழலை உருவாக்க முடியும் என்றும் மக்கள் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரியத் தீர்வு காணப் பாடுபடுவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.