தமிழ்நாடு தேர்தல் கோலம் பூண்டிருக்கிறது. சாலைகளில், அலுவலகங்களில், கிராமத்து மரத்தடியில், தேநீர்க்கடைகளில், வீடுகளில், எல்லாவற்றிற்கும் மேலாக சமூக வலைதளங்களில் மக்கள் கடந்த கால, நிகழ் கால, எதிர்கால அரசியலை அலசிக்கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் என்பது தேர்தல் நேரத்து செயல்பாடு என்பதாக மட்டும் அல்லாமல், சமூக வலைதளங்களுக்கு பிறகு ஒவ்வொருவரும் அரசியலில் நேரடி பங்கேற்பாளராக மக்கள் மாறியிருக்கிறார்கள். “யார் ஜெயிச்சி நமக்கு என்ன ஆகப்போகிறது? நம்ம உழைச்சா தான் நமக்கு சோறு” என்ற கடந்த காலத்தில் இருந்த இந்த அலட்சிய மனநிலை மக்களிடம் தற்போது கொஞ்சம் மாறியிருக்கிறது. அவர்கள் போடும் இந்த ஓட்டு அவர்களின் அன்றாட வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் மாற்றுவதாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு வந்திருக்கும் இந்த நம்பிக்கை உண்மையில் ஆரோக்கியமானது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த கால தேர்தல்கள் பெரும்பாலும் இரண்டு கட்சிகளுக்கிடையேயான நேரடி போட்டியாக இருந்தன. தலைவர்களின் கவர்ச்சி, தேர்தல் அறிக்கையின் தாக்கம், ஆளும்கட்சிக்கு எதிரான அலை (anti-incumbency) போன்றவை வாக்காளர்களின் முடிவுகளை நிர்ணயித்தன. ஆனால் இப்போது இந்த இருதரப்பு அரசியல் அமைப்பு மெதுவாக சிதைந்து, பலதரப்பு போட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது. விஜய் போன்றோர்களின் புதிய அரசியல் வருகையும், சீமான் போன்றவர்களின் சீரான வளர்ச்சியும், வாக்காளர்களுக்கு கூடுதல் தேர்வுகளை வழங்கியுள்ளன. இதனால் “புதியவர்களை முயற்சி செய்து பார்க்கலாம்” என்ற மனநிலை உருவாகி, வாக்குகள் பிளவுபடும் நிலையும் அதிகரித்துள்ளது.

இந்த மாற்றத்தில் இளம் தலைமுறை வாக்காளர்களின் தாக்கம் முக்கியமானது. குடும்பம், சாதி, சமூக அடையாளங்கள் போன்றவை தேர்தல் அரசியலில் பிரதானமானவைகளாக இருந்தன. ஆனால் இன்றைய இளைஞர்களிடம் இவற்றின் மீதான தாக்கம் குறைந்திருக்கிறது. அதே நேரத்தில், டிஜிட்டல் உலகின் தாக்கமும் அரசியலில் பெரிதும் உயர்ந்துள்ளது. முன்பு தேர்தல் பிரச்சாரம் என்றால் கூட்டங்கள், தெரு பேச்சுகள், தொலைக்காட்சி விவாதங்கள் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் இப்போது சமூக ஊடகங்கள் அரசியலை தினசரி இயக்குகின்றன. தகவல்கள் வேகமாகப் பரவுகின்றன, கருத்துக்கள் உடனுக்குடன் உருவாகின்றன, விமர்சனங்களும் அதே வேகத்தில் வெளிப்படுகின்றன. இதனால் வாக்காளர்கள் அதிகமாக தகவல் அறிந்து கொண்டாலும், அதே சமயம் அவர்கள் அதிகமாக சந்தேகித்து சிந்திக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

இதையெல்லாம் மனத்தில் வைத்து, சரியான விதத்தில் தேர்தல் களத்தை கையாண்டு வரும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பாண்டி,  தூத்துக்குடி மாவட்ட தேர்தல் களத்தில் தனித்துவம் பெற்று வருகிறார் என்று கூறினால் அது மிகையல்ல.

நாம் தமிழர் கட்சியினர் பொதுவான தங்களை தமிழ் சமூகத்தின் எளிய பிள்ளைகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வது உண்டு. அது போலவே கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பாண்டி மிகவும் எளியவராகவும், அனைவரையும் மரியாதையாக, குறிப்பாக தேர்தல் களத்தில் எதிர் தரப்பினரை எந்தவொரு இடத்திலும் தேர்தல் பரப்புரையில் கண்ணியம் குறையாத வார்த்தைகளில் விமர்சிக்கும் பண்பாளராக விளங்கி வருகிறாராம்.

அதோடு மட்டும் அல்லாமல் கோவில்பட்டி நகர் மன்ற தலைவராக இருக்கக்கூடிய ஆளும் திமுக வேட்பாளர் கருணாநிதி, கடந்த 15 ஆண்டுகளாக தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள கடம்பூர் ராஜூ ஆகியோர் தொகுதிக்கு செய்ய தவறிய மக்கள் பணிகளை சுட்டிக்காட்டி தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பாண்டியின் செயல்பாடு காண்போரின் புருவத்தை உயர்த்த செய்கிறது.

மேலும், கோவில்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், கோவில்பட்டி நகராட்சி மாநகராட்சியாக உயர்த்தப்படும். கயத்தாறு நகராட்சியாக மாற்றப்படும்.

கழுகுமலையைத் தலைமையிடமாகக் கொண்டு தாலுகா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அமைக்கப்படும். வீரவாஞ்சி நகர் பகுதியில் நீண்டகாலமாகப் பட்டா இன்றி தவிக்கும் மக்களுக்கு உரிய வீட்டு மனைப் பட்டா பெற்றுத் தரப்படும். பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள கோவில்பட்டியின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று வெறும் வாக்குறுதிகளை கொடுப்பதோடு நின்று விடாமல்,

சட்டமன்ற உறுப்பினராக நான் பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள் மேற்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், 7-வது மாதமே எனது பதவியைத் ராஜினாமா செய்வேன் என்று மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் ஒரு அதிரடிச் சவாலை முன்வைத்த பாண்டியின்  நடவடிக்கை கண்டு எதிர்கட்சியினர் கொஞ்சம் சலசலத்து போய்விட்டார்கள் என்று சொல்லலாம்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பாண்டியின் தேர்தல் களமாடல், கோவில்பட்டி தொகுதி மக்கள், மாற்றத்தை உருவாக்க, புதியவர்களை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற மனநிலை உருவாகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். இதனால், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் களத்தில் தனி கவனம் பெறும் வேட்பாளராக கோவில்பட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாண்டி இருக்கிறார் என்றும், அவர் பெருவாரியான வாக்குகள் பெருவார் என்றும் சொல்லப்படுகிறது.