புனிதமான கோயில் வளாகத்தைப் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்திய தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மார்ச் 3-ஆம் தேதி, திருச்செந்தூர் கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், தங்களது மேலாளரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். இதற்காகக் கோயில் வளாகத்தில் உள்ள பொது தரிசன வரிசைக் கட்டடத்தைப் பயன்படுத்தியதோடு, அங்கு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி, பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது குறித்து கோயில் நிர்வாகம் நடத்திய விசாரணையில்:

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை சாத்தப்பட்டிருந்த மதிய வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. மதியம் 2:30 மணியளவில் தரிசன வரிசை அறை எண் 5-இல் ஊழியர்கள் ஒன்றுகூடி, மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த விதிமீறலைச் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து அந்நிறுவனம் எடுத்த முதற்கட்ட நடவடிக்கையாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 4 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பங்கேற்ற மற்ற ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் அபராதமாகப் பிடிக்கப்பட்டது.

இருப்பினும், கோயிலின் புனிதத்தைக் காக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்கவும், கோயில் இணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் திருச்செந்தூர் கோயில் தக்கார் ஏற்று உறுதி செய்ததைத் தொடர்ந்து,அந்தத் தனியார் நிறுவனத்திற்கு ₹1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.