தூத்துக்குடியில் உறவினருடன் மது அருந்தியபோது ஏற்பட்ட திடீர் மோதலில், லாரி செட் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மச்சாது நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). லாரி செட் தொழில் செய்து வந்த இவருக்கு, மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 4-வது கேட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக ஆறுமுகம் சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த மற்றொரு உறவினருடன் தனது இருசக்கர வாகனத்தில் ஆறுமுகம் வெளியே சென்றுள்ளார். இருவரும் ஆதிபராசக்தி நகர் மேற்குப் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்குச் சென்று மது அருந்தியதாகத் தெரிகிறது.

மது அருந்திக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர், அங்கிருந்த மதுபாட்டிலை உடைத்து ஆறுமுகத்தின் உடலில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

நேற்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், ரத்தக் காயங்களுடன் கிடந்த ஆறுமுகத்தின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்த உறவினரைப் பிடிக்கத் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.