முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஓபிஎஸ்சின் இந்த முடிவுக்கு அவரது  ஆதரவாளர்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஏசாதுரை, ஓபிஎஸ்-ஸின் முடிவை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, தனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ. பன்னீர்செல்வத்தின் உருவப்படங்களை ஏசாதுரை அதிரடியாக அப்புறப்படுத்தினார். இது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஏசாதுரை கூறியதாவது:

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்டு, உயர்ந்த நிலைக்கு வந்த ஓ. பன்னீர்செல்வம், தற்போது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்துவிட்டார். இவரை அந்தப் புனித ஆத்மாக்கள் ஒருபோதும் மன்னிக்காது.

இந்த திடீர் அரசியல் மாற்றத்தால் தூத்துக்குடி மாவட்ட ஓபிஎஸ் அணியினர் மத்தியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்திவிட்டு, அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போவதாக ஏசாதுரை தெரிவித்துள்ளார்.