தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் என் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அரசு சிறப்புச் செயலாளராக பணியாற்றி வந்த சஜ்ஜன் ரா சவான், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த பால சுப்ரமணியம், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் அரசு கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் செயலாளராக இருந்த ஸ்ரீ வெங்கட பிரியா தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த பானோத் ம்ருகேந்தர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போன்று, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பிரியங்காவும், சமூக நல இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக ஷரண்யா அறியும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் செயல் அலுவலராக ஸ்வேதா மேனனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.