புதியம்புத்தூர் ஊராட்சி தூய்மை காவலரின் மகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்குத் தேர்வு முடிவுகள் நேற்று ( மே16 ) காலை 9 மணியளவில் வெளியானது.

மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் இந்த ஆண்டு தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 8,71,239. இதில், மாணவிகள்  4,35,119, மாணவர்கள் 4,36,120 ஆகும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் 8,17,261 ( 95.03 சதவீதம் ).

இதில், மாணவிகள் 4.17,183 (95.88 சதவீதம் ) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,00,078 ( 91.74 சதவீதம் ) தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட 4.14 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 308  பள்ளிகளில், 10,347 மாணவர்கள், 11,112 மாணவிகள் என மொத்தம் 21,459 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 9,867 மாணவர்கள், 10,897 மாணவிகள் என மொத்தம் 20,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 95.36 சதவீதமும், மாணவிகள் 98.07 சதவீதமும் என மொத்தத்தில் 96.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டங்களில் மாநில அளவில் 96.76 சதவீதம் பெற்று தூத்துக்குடி மாவட்டம் 3 வது இடத்தையும், அரசு பள்ளி மாணவர்களில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டங்களில் மாநில அளவில் 95.40 சதவீதம் பெற்று தூத்துக்குடி மாவட்டம் 5 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 308 பள்ளிகளில் 161 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைக் கொடுத்துள்ளனர். 89 அரசு பள்ளிகளில் 35 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைக் கொடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷ்மா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் ராஜேஸ்வரி பாராட்டினார்.

புதியம்புத்தூர் ஊராட்சியில் தூய்மை காவலராக பணிபுரிந்து வரும் முத்துக்குமார் - டெய்லராக வேலை பார்த்து வரும் முத்துலட்சுமி ஆகியோரது மகளான ரேஷ்மா மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து தூத்துக்குடி மாவட்டத்திற்கும், பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உதவியுடன் படித்ததால் தான் 498 மதிப்பெண்கள் பெற முடிந்தது. டாக்டராவது எனது கனவு என்கிறார் மாணவி ரேஷ்மா.