எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியை லோரா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, உடனடியாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வெர்பல் என்ற பெயரில் இயங்கும் சமூக ஊடகக் கணக்கிலிருந்து வெளியான பல ஸ்கிரீன் ஷாட்கள் புதன்கிழமை முதல் வேகமாக பரவின. இந்தப் பதிவுகள் பேராசிரியை லோராவுடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது. ஒரு பதிவில், பாகிஸ்தானில் அப்பாவி மக்களை குறிவைப்பதாக இந்தியாவைக் குற்றம் சாட்டியதோடு, ராணுவ நடவடிக்கையை தேர்தல் ஸ்டண்ட் என்றும் விமர்சித்திருந்தது.

மற்றொரு பதிவில், தற்போதைய கொள்கைகளால் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை, ஊரடங்கு, மற்றும் பணவீக்கம் ஏற்படும் என்று கூறியிருந்தது. இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பகிரப்பட்டதாகவும், அதில், ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்திய பதிலடி தாக்குதலை ஏதோ பாகிஸ்தான் மக்களை இந்தியா கொடுமைப்படுத்துவது போல மோசமாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பதிவுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. பலரும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தை டேக் செய்து விளக்கம் கோரினர். #AntiIndiaProf மற்றும் #SRM போன்ற ஹேஷ்டேக்குகள் நாடு முழுவதும் பிரபலமாயின. பேராசிரியை லோராவின் கருத்துக்கள் பொறுப்பற்றவை என்று விமர்சகர்கள் பலரும் கடுமையாக சாடியுள்ளனர்.

இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் எஸ். பொன்னுசாமி கையெழுத்திட்ட இடைநீக்க உத்தரவு மே 8, 2025 அன்று பிறப்பிக்கப்பட்டு, அது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த உத்தரவில், "நெறிமுறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக" பேராசிரியை லோரா விசாரணைக்கு உட்பட்டு உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமோ அல்லது பேராசிரியை லோராவோ "வெர்பல்" கணக்கின் உரிமை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், அந்த கணக்கின் பெயரும் படமும் பேராசிரியையின் பல்கலைக்கழக சுயவிவரத்துடன் ஒத்துப் போவது, பொதுமக்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது என்பது குறிப்பிடதக்கது.