<p><b>விளாத்திகுளம் அருகே தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.&nbsp;</b></p><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டிக்கு அருகில் விளாத்திகுளம், சித்தவன்நாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி,&nbsp; வேலிடுபட்டி, சிங்கிலி பட்டி, பேரிலோவன்பட்டி வழியாக&nbsp; கோவில்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்து விளாத்திகுளத்தில் இருந்து இன்று காலை 8.10 மணிக்கு புறப்பட்டது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தினால் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் நிரந்தர ஓட்டுநர் இருந்தும் தற்காலிக ஓட்டுநர்&nbsp; சுப்பிரமணி பேருந்தை இயக்கினார்.&nbsp;</p><p>இந்த பேருந்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்&nbsp; பயணித்துள்ளனர். இந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக&nbsp; உயிர் தப்பினர். பல மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பேரிலோவன்பட்டி&nbsp; அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை&nbsp; அளிக்கப்பட்டது.</p><p> விபத்து குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.&nbsp;</p>