தூத்துக்குடியில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கடல் அட்டைகள், கஞ்சா, புகையிலைப் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படும் விரலி மஞ்சள், பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தலை தடுக்கும் வகையில், தமிழக போலீசார், கடலோர காவல் படையினர், உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜ், இசக்கி, பழனி, ஆகியோர் வேம்பார் கடற்கரையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

அப்போது கடற்கரை நோக்கி வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில்  1250 கிலோ பீடி இலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த பீடி இலைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதும் தெரியவந்தது.   இதையடுத்து பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக மணக்கரை கீழூர் கல்லத்தியான் மகன் சரவணன் (23),  சடையன்  மகன் மாரியப்பன் (38), பாளையங்கோட்டை சாந்திநகர் சவரிமுத்து மகன் லூர்து அந்தோணி (41), பாளையங்கோட்டை கம்பராமாயண தெரு முருகேசன் மகன் முத்துக்குமார் (38), திருநெல்வேலி நொச்சிகுளம் வெயிலுமுத்து மகன் செந்தூர் (20),  சண்முகம் மகன் சிவபெருமாள் (40) ஆகிய 6பேரை போலீசார் கைது செய்தனர்.