தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நிவர் புயலால் பெரிய அளவில் எந்த வித பாதிப்பும் இல்லை என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் கரையைக் கடந்தவுடன், கடலூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். ரெட்டிச்சாவடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை  கேட்டறிந்தார் முதல்வர் பின்னர் அதனைத் தொடர்ந்து கீழ்குமாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை அவர் வழங்கினார். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளில் துரிதப்படுத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

கடலூர் துறைமுகம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயலால் சேமடைந்த படகுகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள், மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதலமைச்சரிடம் அளித்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும், உரிய நேரத்தில் தமிழக அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் உயிர் சேதம், பொருள் சேதம் பெரிய அளவில்  குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.