சர்வதேச விண்வெளி மையத்தில் 6 ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட எலிகளின் விந்தணுக்கள் மூலம் 168 குட்டிகள் பிறந்துள்ளன என்று ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் உள்ள யாமானாஷி பல்கலைக் கழத்தில் உள்ள முதன்மை ஆசிரியர் டெருஹிகோ வாகயாமா மற்றும் அவரது ஆராய்ச்சியாளர்கள் குழு, கடந்த 2013ம் ஆண்டு 3 பெட்டிகளில் தலா 48 குப்பிகளில் எலிகளின் உறைந்த உலர்ந்த விந்தணுக்களை நீண்ட கால ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியது. விண்வெளியில் உள்ள கதிர்வீச்சால் உயிரணுக்களில் மரபணு மாற்றம் ஏற்படுமா?
அதன்மூலம், உருவாகும் புதிய உயிரினங்களில் பாதிப்புகள், பிறழ்வுகள் ஏற்படுமா என்பதை கண்டறிய இந்த சோதனை செய்யப் பட்டது. இந்த ஒவ்வொரு தொகுதிகளாக பூமிக்குத் திரும்பின. முதலாவது ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதியானது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு திரும்பின.
விந்தணு மீண்டும் பூமிக்கு வந்த பின் நீரிழப்பு செய்யப்பட்டதன் விளைவாக 168 குட்டிகள் பிறந்துள்ளன. இவை எதுவுமே விண்வௌியில் நிலவும் அதிகப்பட்ச கதிர்வீச்சால் பாதிக்கப்படவில்லை. சாதாரணமாக பூமியில் பிறக்கும் எலிகளை போன்றே உள்ளன. உருவத்திலும், அதன் அளவிலும் கூட மாற்றமில்லை.
இது குறித்து டெருஹிகோ வாகயாமா கூறுகையில், ‘‘விண்வெளியில் சோதனை செய்யப்பட்ட விந்தணுக்க ளில் இருந்து பிறந்துள்ள எலிகளுக்கும், பூமியில் உள்ள எலிகளுக்கும் சிறிய வித்தியாசம் கூட இல்லை. எல்லா குட்டிகளும் சாதாரண தோற்றத்தைக் கொண்டுள்ளன. உலர்ந்த விந்தணுக் களை விண்வெளி சுற்றுப்பாதையில் 200 ஆண்டுகள் வரை சேமிக்க முடியும்.
விண்வெளி யுகத்திற்கு மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு முன், உறைந்த பெண் சினை முட்டைகள் மற்றும் கருவுற்ற கருக்கள் ஆகியவற்ளை விண்வெளிக்கு எடுத்துச் சென்று கதிர்வீச்சின் விளைவுகளின் சோதனைக்கு உட்படுத்த வேண்டியது இன்றியமையாதது,’’ என்றார்.