உலகின் எந்தவொரு பகுதிக்கும் சுற்றுலா சென்று இருந்தாலும் இதுபோன்ற ஒரு வினோதமான இடத்தை உங்களால் பார்த்து இருக்கவே முடியாது என்று சொல்லும் வகையில், ஆணுறுப்பு சிலைகளைக் கொண்டே ஒரு பூங்காவை ஒரு நாட்டில் அமைத்துள்ளனர். அனைவரும் பார்த்தாலே முகம் சுளிக்கும் வகையில் இந்த பூங்காவில் பல ஆணுறுப்பு சிலைக்கள் அமைக்கப்பட்ட இருந்தாலும், அதனை பார்க்க சர்வதேச சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
தென் கொரியாவின் சின்னம் நகரில் அமைந்துள்ள இந்த ஹேசிண்டாங் பூங்காவை ஆணுறுப்பு பூங்கா என்றும் அழைப்பார்கள். அதாவது இந்த பூங்கா முழுக்க ஆணுறுப்பு சிலைகளால் நிரம்பி உள்ளதாலேயே இதை இப்படி ஆணுறுப்பு பூங்கா என்று அழைக்கிறார்கள்.
ஏன் இப்படி வினோதமான பூங்காவை அமைத்துள்ளனர் என்ற சந்தேகம் வரும் போது, அதற்கான விடையை தேடினால், அதற்கு இரண்டு வகையான கதைகளைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு கன்னிப் பெண் ஒருவர் கடற்பாசி அறுவடை செய்யப் புதிதாகத் திருமணமான தனது கணவரின் படகில் சென்றிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் வந்து அழைத்துக் கொள்வதாக அந்த பெண்ணின் கணவர் உறுதி அளித்துள்ளார். ஆனால், அந்த பெண்ணை கணவரால் காப்பாற்ற முடியவில்லையாம். அதனால், அவள் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டாராம்.
அதன் பிறகு தான் வினோதமான சம்பவம் நடந்ததாம். அதாவது அந்த கிராமத்தில் இருந்து சென்ற யாருடைய வலைகளிலும் அதன் பிறகு மீன்கள் சிக்கவில்லையாம். இதனால் கன்னிப்பெண்ணின் உயிரிழப்பே இதற்குக் காரணம் என அவர்கள் நம்ப தொடங்கியுள்ளனர். அதனால் அந்த கன்னிப் பெண்ணைச் சமாதானப்படுத்த இதுபோன்ற ஆணுறுப்பு சிலைகளை வைத்ததாகச் சொல்கிறார்கள்.
இந்த பரிகாரத்தைச் செய்த பிறகே மீண்டும் மீன்களைப் பிடிக்க முடிந்ததாக அந்த கிராம மக்கள் நம்புகிறார்கள். அதன் பிறகு எப்போதெல்லாம் மீன்கள் குறைவாகப் பிடிபடுகிறதோ, அப்போதெல்லாம் ஆணுறுப்பு சிலைகளை வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். தற்போது அந்த பூங்கா முழுக்க 50க்கும் மேற்பட்ட ஆணுறுப்பு சிலைகள் இருக்கிறதாம். நாளடைவில் இதுவே ஆணுறுப்பு பூங்காவாக மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆணுறுப்பு பூங்காவிற்கு மற்றொரு கதையும் சொல்கிறார்கள். ஆனால், அவை சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசம் நிறைந்தவையாக உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு தென் கொரியாவில் தான் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்த நிலையில், அப்போது தான் இந்த பூங்கா உலகளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.