இலங்கை நாட்டுக்கு கொரோனா தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்களை இந்தியா பரிசாக அனுப்பியது. இதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த மாதம் 3-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளை போடும் மிகப்பெரிய பணி இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில் உலகின் பல நாடுகள், இந்தியாவை தடுப்பூசிகளுக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
நேபாளம், வங்க தேசம், மியான்மர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஒரு வாரத்தில் 55 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா பரிசாக அளித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி, கொழும்புவுக்கு நேற்று வந்து சேர்ந்தது. இதனைப் பெற்றுக் கொண்டதும், இலங்கை அதிபர் ராஜபக்சே டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘இந்தியா மக்கள் அனுப்பிய கோவிட் - 19ன் தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்களை பெற்றுக் கொண்டோம். இந்த சோதனையான காலத்தில் இலங்கை மக்களுக்கு நீங்கள் காட்டிய அன்பான பெருந்தன்மைக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.