வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜாக் மா பொது வெளியில் தோன்றினார்.
சீனாவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் தலைவர் ஜாக் மா. சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்டதன் மூலம் அலிபாபா 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது.
ஜாக் மாவும் இதன் மூலம் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக ஜாக் மாவுக்கும், சீன அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தனது நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் சீன அரசின் செயல் பழமைவாதம் என்று ஜாக் மா விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜாக் மாவுக்கு சீன அரசு பல இடையூறுகளை அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஜாக் மாவைக் காணவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜாக் மா பொது வெளியில் தோன்றினார். சீனாவின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 100 ஆசிரியர்களுடன் காணொலி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தோன்றி ஆசிரியர்களுடன் ஜாக் மா உரையாடினார்.