சர்வதேச அளவில் எந்த நாட்டின் ராணுவம் பலமாக இருக்கிறது. எந்த ராணுவம் பலவீனமாக இருக்கிறது என்பது குறித்த லிஸ்டை குளோபல் ஃபயர்பவர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் பாதுகாப்புத் தகவல்களைக் கண்காணிக்கும் இணையதளமான குளோபல் ஃபயர்பவர் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகில் எந்த நாடு வலிமையான ராணுவத்தைக் கொண்டுள்ளது.
எந்த நாடு பலவீனமான ராணுவத்தைக் கொண்டுள்ளது என்பது குறித்த லிஸ்டை வெளியிடும். அதன்படி இந்தாண்டிற்கான லிஸ்டை குளோபல் ஃபயர்பவர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. இது சர்வதேச அளவில் எந்த நாடு ராணுவம் வலிமையுமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய உதவும்.
அதன்படி சர்வதேச அளவில் அதிக சக்திவாய்ந்த ராணுவமாக அமெரிக்கா இருக்கிறது. அதைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் சீனா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்த ரேங்கிங் படி இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
வீரர்கள் எண்ணிக்கை, ராணுவ உபகரணங்கள், நிதி, புவியியல் இருப்பிடம் மற்றும் வளங்கள் என மொத்தம் 60க்கும் மேற்பட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஃபயர்பவர் லிஸ்டை உருவாக்கியுள்ளனர். இந்தப் படியலில் மொத்தம் 145 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த 60 காரணங்களையும் வைத்துக் கணக்கிட்டே பவர்இண்டெக்ஸ் ஸ்கோரை நிர்ணயம் செய்கிறார்கள். இதில் மார்க் குறைவாக வாங்கி இருந்தால் வலுவான ராணுவம் என்று அர்த்தமாகும்.
இது குறித்து குளோபல் ஃபயர்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் தனித்துவமான முறையை வைத்து நாங்கள் இதைக் கணக்கிடுகிறோம். இதன் மூலம் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடுகள், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் என அனைத்தையும் எங்களால் ஒப்பிட்ட பார்க்க முடிகிறது. ஆண்டுதோறும் இந்தப் பட்டியலை வெளியிடும் நிலையில், இந்தாண்டிற்கான பட்டியலை இப்போது வெளியிடுகிறோம்" என்றார்.
இந்த அணுகுமுறை ஃபயர்பவரைத் தாண்டி ராணுவத் திறன்களை முழுமையாகக் கண்டறிய உதவுகிறது. பொருளாதார வலிமை, தளவாடத் திறன் எனப் பல காரணங்களைக் கண்டறிவதன் மூலம், சர்வதேச ராணுவங்கள் குறித்துத் தெளிவான பார்வை நமக்குக் கிடைக்கிறது.
இந்த லிஸ்டில் டாப் இடத்தில் அமெரிக்கா இருக்கும் நிலையில், ரஷ்யா, சீனா நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இந்தியா 4ஆவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து தென்கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், துருக்கி ஆகிய நாடுகள் 5 முதல் 7 வரையிலான இடங்களில் உள்ளன. பாகிஸ்தான், துருக்கி நாடுகளும் டாப் 10 இடத்தில் வந்துள்ளன.
அதேபோல பலவீனமான நாடுகள் லிஸ்டில் பூட்டான் முதலிடத்தில் உள்ள நிலையில், மால்டோவா, சுரினாம், நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சோமாலியா, பெனின் லைபீரியா, பெலிஸ் நாடுகள் 4 முதல் 7 வரையிலான இடங்களில் உள்ளன. சியரா லியோன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஐஸ்லாந்து நாடுகள் பலவீனமான ராணுவம் லிஸ்டில் இருக்கிறது.
பொதுவாக ஒரு நாட்டின் ராணுவ பலத்தைப் புரிந்துகொள்வது ஒரு சிக்கலான விஷயமாகும். குளோபல் ஃபயர்பவர் தரவரிசை உலகளாவிய ராணுவ சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள ஒரு பயனுள்ள தொடக்கப் புள்ளியாக இருந்தாலும், இதை மட்டுமே வைத்து முழுமையாக நம்மால் ராணுவ பலத்தைக் கண்டறிய முடியாது.