ஈழப்போரின்போது முள்ளிவாய்க்காலில் கஞ்சிக்காக வரிசையில் நின்ற தமிழ் குழந்தைகள் மீது குண்டுகளை வீசிக்கொன்ற ராஜக்சே அரசு இன்று அதற்கான வினையை அனுபவித்து வருகிறது என இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன் கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலை உயர்வால் அந்நாட்டில் மக்கள் வாழ வழியின்றி இந்தியாவுக்குள் அகதிகளாக அடைக்கலம் தேடி வரத் தொடங்கி இருக்கின்றனர்.
கேஸ் தட்டுப்பாடு அதிகரித்து இருப்பதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். திரிகோணமலை, நுவரெலியா பகுதிகளில் பல மணி நேரம் கேஸ் வாங்க காத்திருந்தும் கிடைக்காததால் மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன், "கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருக்கும் இந்த சூழலிலும் இலங்கை அரசு இனப் பிரிவினைவாதத்தை கைவிடாமல் இருக்கிறது. ஈழப்போரின்போது முள்ளிவாய்க்காலில் கஞ்சிக்காக வரிசையில் நின்றுகொண்டு இருந்த குழந்தைகளை இலங்கை ராணுவம் குண்டுகளை வீசி கொன்று குவித்தது. கர்ப்பிணிகள், தாய்மார்கள், பெண்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர்.
இன்று இலங்கையின் மொத்த படைகளையும் வைத்து இருக்கும் இலங்கை அரசை நடத்தி வரும் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் மகிந்த ராஜபக்ஷே அரசு இத்தகைய கொடூரமான காரியங்கள் எல்லாம் நிகழ்த்தியக் காட்டியது. அன்று ஈழத் தமிழர்களுக்கு செய்த கொடூரத்திற்கான கர்மவினையை தான் இன்று இலங்கை அரசாங்கம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. இந்த கர்மவினை உங்களைதான் சூழ்ந்து இருக்கிறது.
அதே நேரம் எங்கள் அன்பான சிங்கள மக்கள் துயரப்படுவதையும், உணவின்றி தெருக்களில் நிற்பதையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் நிலையை எண்ணி வேதனைப்படுகிறோம்." எனக் கூறினார்.