இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஸ்மித் அடிக்கும் 11-வது சதம் இதுவாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி ஸ்டேடியத்தில் அங்கு பகல்-இரவு மோதலாக இன்று நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை வார்னர் - பிஞ்ச் ஜோடி சேர்த்திருந்த நிலையில், பிஞ்சும் 60 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வார்னர் 83 ரன்களில் ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஸ்மித் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 64 பந்துகளில் 104-ரன்கள் குவித்த ஸ்மித் ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார்.