சாயர்புரம் அருகே ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பணி செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி பத்திரகாளி (52). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (14.06.2021) அதிகாலை இவரது ஆட்டுத் தொழுவத்தில் ஆடுகள் சத்தம் போட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரகாளி மற்றும் அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது அங்கு இரு சக்கர வாகனத்தில் இரண்டு மர்ம நபர்கள் பத்திரகாளியின் 2 ஆடுகளை இருசக்கர வாகனத்தில் திருடி உள்ளனர். உடனே பத்திரகாளி மற்றும் அவரது உறவினர்கள் ஆடுகளை திருடிய இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் அவர்கள் மாவடிபண்ணை, கீழத் தெருவை சேர்ந்த பகவத்சிங் மகன் மகேஷ் குமார் (39) மற்றும் சொக்கபழங்கரை கீழத் தெருவை சேர்ந்த கணேசன் மகன் இசக்கிமுத்து (27) என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து சாயர்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் வழக்கு பதிவு செய்து மகேஷ்குமார் மற்றும் இசக்கிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.