• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மதுபான கடைகள் திறப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள 144 டாஸ்மாக் கடைகள் இன்று ( 14.6.2021 ) திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டு கொரோனா தடுப்பு தகுந்த  பாதுகாப்பு நடவடிக்கை களுடன்  விற்பனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவிய நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்தது. அதன்படி டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 144 டாஸ்மாக் கடைகளும் இன்று  ( 14.6.202 ) திங்கள் கிழமை முதல் திறக்கப்பட்டன. இவை  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும். அனைத்து மதுக்கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் தடுப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த தடுப்புகள் வழியாக வரிசையாக சென்று மதுபானங்களை வாங்க அறிவுறுத்தப்பட்டு, மதுபானம் வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி சோரீஸ்புரம் பகுதியில் 9966 எண்  மதுக்கடையில், கடை மேற்பார்வையாளர் சுரேஸ் கண்காணிப்பில், மதுபானம் வாங்க வரும் அனைவருக்கும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தப்பட்டு, முகக்கவசம் அணிந்துள்ள வர்களுக்கு மட்டுமே மதுபானம் வாங்க அனுமதிக்கப்பட்டு, கடை விற்பனையாளர்கள் இசக்கி பாண்டி, முத்துப்பாண்டி, பூவலிங்கம் ஆகியோர் மதுவிற்பனை செய்து வருகின்றனர்.


கடைகளில் போதுமான மதுபானங்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் குடோன் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு , அங்கிருந்து கடைகளுக்கு மதுபானங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு மதுபானங்கள் விற்பனையாகாமல் மந்தமாகவே காலை முதல் பிற்பகல் வரையில் இருந்து வருவதாக மதுக்கடை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மதுக்கடை பாதுகாப்பில் பெண் காவலர்கள்

மதுக்கடை பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் சோரீஸ்புரம் உள்ளிட்ட கடைகளில் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெண் காவலர்களை இனி சாலையோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தமிழக முதல்வர் அறிவுறுத்தியிருக்கும் நிலையில், மதுக்கடை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்தியிருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.


  • Share on

மதுக்கடைகள் திறப்பு : நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்

  • Share on