பணம் இருப்பவர்களுக்கு தான் காவல்துறை என்றால் ஏழைகள் எங்கே செல்வார்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மணல் மாபியாக்களுக்கு தான் போலீஸ் பாதுகாப்பு தருமா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.
சாத்தான்குளம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகும் தூத்துக்குடி போலீஸ் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என நீதிபதிகள் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் அகரம் கிராமத்தில் முறைகேடாக மணல் குவாரி செயல்பட்டு வருவதாக பாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை திரும்ப பெறும்படி மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாலகிருஷ்ணன் பாதுகாப்பு கோரி கோர்ட்டில் முறையிட்டார். நீதிமன்றம் பாலகிருஷ்ணனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் மீண்டும் பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தை நாடினார். இதுகுறித்த வழக்கு நேற்று ( 23.11.2020) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு வந்தது.
அப்போது நீதிபதிகள் ‘‘பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காவல்துறை என்றால், ஏழை மக்கள் எங்கே செல்வார்கள்?. தூத்துக்கடி காவல்துறை மணல் மாஃபியாக்களுக்கு பாதுகாப்பா?. சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும் தூத்துக்குடி போலீசார் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதுகாப்பு வழங்காதது ஏன்?, நீதிமன்ற உத்தரவை போலீசார் எப்படி மதிக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது’’ என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.