இலங்கைக்கு படகில் தப்பிச் செல்ல முயன்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனுடன் தூத்துக்குடியில் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோனதன் தோர்ன், இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல கடற்கரையில் சுற்றி திரிந்த போது கியூ பிரிவு போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜோனதன் தோர்ன் மீது மும்பையில் 226 கிலோ கேட்டமைன் என்ற போதைப் பொருள் பரிமாற்றம் செய்த வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பணம், இரண்டு ஐபோன்கள், ஹேண்ட்பேக், ஓசிஐ கார்டு உள்ளிட்டவைகளை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், ஒரு ஐபோனின் பாஸ்வேர்டை தர மறுத்து தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும் வரையில் அடம் பிடித்து விட்டார். இதனால் அந்த போனில் என்ன இருக்கிறது என்று அதிகாரிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதில் போதை பொருட்கள் தொடர்பான ரகசியங்கள் உள்ளனவா? அல்லது சர்வதேச போதைப் பொருள் சிண்டிகேட்டின் எண்கள் உள்ளனவா? இலங்கையிலுள்ள போதைப்பொருள் கும்பல் மற்றும் தூத்துக்குடியில் வேறு நபர்கள் தொடர்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை.
இதற்கிடையே ஜோனதன் தோர்ன் வைத்திருந்த மற்றொரு போனை ஆய்வு செய்த கியூ பிரிவு போலீசார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசி இருப்பது கண்டு பிடித்துள்ளனர். தொடர்ந்து அவர் தூத்துக்குடியில் பேசிவந்த இரு எண்களின் கால் லிஸ்ட் டையும் பெற்று விசாரித்து வருகின்றனர்.
கடல் வழியாக இலங்கைக்கு செல்ல தூத்துக்குடியில் அவருக்கு யார் உதவி செய்தது என்பது குறித்த விசாரணை நடத்திவரும் போலீசார் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.