நாங்கள் கேட்ட சாலைக்கு பதிலாக வேறொரு சாலையை அமைத்து கொடுத்து, அதையும் தரமற்றதாக போடப்பட்டுள்ளதாக வேதனை கலந்த புகார் தெரிவித்து புலம்பி தவிக்கின்றனர் கே.சுப்பிரமணி யபுரம் கிராம மக்கள்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.சுப்பிரமணியபுரம் கிராமத்தில் பொதுமக்கள் 25 ஆண்டு களுக்கும் மேலாக போக்குவரத்திற்கு பயன்படுத்தி வரும் பிரதான சாலையானது குண்டும் குழியுமாக பொதுமக்கள் பயன்படுத்த இயலாத வகையில் கிடப்பதாகவும், எனவே புதிய சாலை அமைத்து தருமாறு பலமுறை அரசிடம் மனு அளித்து தொடர் முயற்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக அரசு சார்பில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த பிரதான சாலையை சீரமைக்காமல், கொரோனா ஊரடங்கினைப் பயன்படுத்தி அதற்கு முற்றிலும் முரணாக பொதுமக்கள் பெரிய அளவில் பயன்படுத்தாத மற்றொரு சாலையை புதுப்பித்து தந்துள்ளனர். மேலும் அவ்வாறு புதிதாக போடப்பட்ட சாலையும், சாலையின் இருபுறங்களிலும் மணல் போடப் படாமல் விபத்தினை ஏற்படுத்தும் வகையிலும், விளக்கமாற்றினால் தூற்றால் தூசி போல ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பறக்கும் நிலையில் தான் தரமற்று உள்ளதாக பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தினை வெளிப் படுத்தி புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொதுமக்கள் சீரமைக்க கோரி, கேட்டுக்கொண்ட சாலை முற்றிலும் பழுதடைந்து உள்ளதால் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களிலிருந்து பல்வேறு பணிக்கு செல்வோர், முதியவர் என அனைவரும் பேருந்து வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் கேட்டது ஒன்று கொடுத்தது வேறொன்றாகி , அதுவும் வீனாகி போய் உள்ள நிலையில், தற்போது நாங்கள் கேட்கும் பிரதான சாலையை உடனடியாக தரமான முறையில் சீரமைத்து தர கோரிக்கை அரசுக்கு வைக்கிறோம்.
மேலும் இது தாமதமாகும் பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களை கிராம மக்கள் முன்னெடுக்க இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.