• vilasalnews@gmail.com

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கள்ளத்தனமாக செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டுக்காரர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டுக்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் வெளி நாட்டு காரர் ஒருவர் சந்தேகப்படும் படியாக சுற்றி வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு காவால் ஆய்வாளர் விஜயஅனிதா, உதவி ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின், செல்வக்குமார், ஜீவமணி தர்மராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

அங்கு சுற்றிக்கொண்டு இருந்தவரை மடக்கிப்பிடித்து கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர், இங்கிலாந்து பாஸ்போர்ட் மற்றும் இந்திய, இலங்கை பணமும் வைத்து இருந்தது தெரியவந்தது.

மேலும் அவரிடம் விசாரணை கொண்டதில்,  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அவரது பெயர் ஜோனாதன் தோர்ன் (வயது 47). அவர் இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்து இருந்தார். அவர் கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருக்கு வந்து உள்ளார். அங்கிருந்து வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு கடந்த 9-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்தார்.

தூத்துக்குடியில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கி இருந்துள்ளார். பின்னர் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்துள்ளார். அதற்காக கடற்கரையில் நின்றபோது அவர் பிடிபட்டது தெரியவந்து உள்ளது. 

இவரிடம் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ கேட்டமைன் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஜோனாதன் தோர்ன் கைது செய்யப்பட்டு உள்ளார். 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஜெயிலில் இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்து உள்ளார். அவர் இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பது தெரியவந்து உள்ளது. இங்கிலாந்தின் சட்ட அமலாக்க அமைப்புகள் மூலம் பலமுறை போதைப்பொருட்கள் வழக்கில் கைதாகி உள்ளார். இதற்காக அங்கு அவர் 21 முறை தண்டனை பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த இரு மாதங்களில் இங்கிருந்து கடத்தல்காரர்கள் பலர் இலங்கைக்கு மஞ்சள் பீடிகள் கடத்திச் சென்று திரும்பி வந்துள்ளனர். அவர்களின் உதவியுடன் ஜோனாதன் தோர்ன் இலங்கைக்கு செல்ல திட்டம் இருக்கலாம் என தெரிகிறது. இதற்காக அவர் படகு உரிமையாளர் ஒருவரை இடைத்தரகர் மூலம் சந்திக்க இருந்த நேரத்தில்தான் சிக்கியுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் அவர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காமல் இருந்துள்ளார். அவரது செல்போன்களின் பாஸ்வேர்டை தெரிவிக்காமல் முரண்டு பிடித்துள்ளார். மேலும் தன்னை என்ன செய்தாலும் தனது ஐபோன்களை  திறக்க முடியாது என்றும் அலட்சியமாக பதில் தெரிவித்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார், ஜோனாதன் தோர்ன் மீது சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்றதாக வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்தனர்.


இதையடுத்து அவரை காவல் துறையினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு  மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

தூத்துக்குடியில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற வெளிநாட்டுக்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு

குளத்தூரில் புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது

  • Share on