கோவில்பட்டியில் கொரோனா ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் காய்கறி, பலசரக்கு கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும், எந்தெந்த கடைகள் திறக்கப்பட வேண்டும், எவையெல்லாம் திறக்கக் கூடாது என்பது குறித்த விபரங்களை யும் தமிழக அரசு குறிப்பிட்டு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோவில்பட்டி நகரில் கொரோனா ஊரடங்கு விதி முறைகளை மீறி பாத்திர கடைகள், பேன்சி ஸ்டோர்கள், செல் போன் ரீ சார்ஜ், செருப்பு உள்ளிட்ட கடைகளை திறந்து வைத்து வியாபாரம் நடப்பதாக புகார்கள் எழுந்தது.
அதைதொடர்ந்து கொரோனா விதிமுறைகளை மீறி திறக்கப்படும் கடைகளை பூட்டி சீல் வைக்குமாறு நகராட்சி ஆணையாளர் ராஜாராம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
அதனையடுத்து கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், வள்ளி ராஜ், காஜா நஜ்முதீன், வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் ஊழியர்கள் நகரில் ஆய்வு நடத்தினர். அப்போது கொரோனா விதி முறைகளை மீறி திறக்கப்பட்டு இருந்த 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
அந்த கடைகளை திறந்து வியாபாரம் செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இவர்களுடன், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள், முககவசம் அணியா தவர்கள் உள்ளிட்டோரிடம் மொத்தமாக ரூ.10 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.