ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள நெல்பயிர்களில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட, ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சார்பில் விவசாயி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் முன்கார் சாகுபடிக்கான நெல் பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் குருத்துப்பூச்சி எனப்படும் நெல் தண்டு துளைப்பான் பூச்சி யால் நெல் பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் குருத்துப்பூச்சியின் சேதம் நாற்றங்காலிலேயே தொடங்குகிறது.
இந்த பூச்சி நடவு செய்த இளம் பயிரிலும், கதிர் பிடிக்கும் பருவத்திலும் நெல் பயிர்களில் பெரும் சேதத்தை உண்டாக்கும். இந்த பூச்சியானது இலைகளின் மேல் நுனிப்பகுதியில் முட்டை களை குவியலாக இட்டு அதில் இருந்து வெளிவரும் புழுக்கள் இளம் நெல் பயிரின் தண்டில் உட்சென்று அதன் அடிப்பாகத்தில் இருந்துகொண்டு உட்பகுதியை கடித்து உண்டு பயிர்களை சேதப்படுத்துகிறது.
இதனால், இளம் நெல் பயிர்களில் நடுக்குருத்து வாடி காய்ந்து வளர்ச்சி குன்றி விடும். தொடர்ந்து நெல் பயிரில் கதிர் பிடிக்கும் பருவத்தில் பூச்சி தாக்கும்போது வெளிவரும் கதிர்களில் பால் பிடிக்காமல் வெண்மை நிற சாவியாக மாறி மகசூல் பெரிதும் பாதிப்பு அடைகிறது.
இதனை கட்டுப்படுத்திட நெல் பயிர்களை அறுவடை செய்த பின்னர் பயிர்களின் தாள்களை மடக்கி உழுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். நெல் நடவு செய்யும்போது வாடிய நடுக்குருத்து உடைய நாற்றுக்களை தவிர்க்கலாம். நடுவதற்கு முன்பு நாற்றுக்களின் நுனியை கிள்ளி முட்டை குவியல்களை அளிக்கலாம்.
இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.