தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரம் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தெர்மல் நகர் காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் பெண் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரத்தில் ஒரு வீட்டில் ட்ருமேன் மனைவி ஜூலியட் (40) மற்றும் தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி (38) ஆகிய இருவரும் மதுரை, திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் மேற்படி இருவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்கள் 3 பேரையும் மீட்டு பாதுகாப்பாக தூத்துக்குடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கண்ட இருவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு காப்பகத்தல் ஒப்படைத்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.