கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1 ½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்றங்கரை சுடலை கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கயத்தாறு காவல் நிலைய காவல் ஆய்வாளர் மணி வண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், காவலர்கள் பாலகிருஷ்ணன், சத்திரியன், கோகுல கண்ணன், தனிப்பிரிவு காவலர் ஆனந்த் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் சங்கர் ஆகியோர் அடங்கிய போலீசார் ஆற்றங்கரை பிள்ளையார் கோவில் அருகே சென்ற போது,
அங்கு கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டம், வெங்கடாச்சலபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன் (21), அழகு பாண்டி மகன் அய்யாத்துரை (19) மற்றும் பரமசிவன் மகன் வைகுண்டராமன் (21) ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் 1 ½ கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக சிறய பொட்டலங்களாக போட்டு விற்பனைக்கு தயாராக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் மேற்படி 3 பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி 3 பேரைக் கைது செய்து 1 ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.