கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளை மத்திய அரசு வழங்கவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் லிப்ட் வசதி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள செவிலியர் விடுதி கொரோனா வார்டாக மாற்றப்பட்டு உள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டிடத்துக்கான லிப்ட் அமைக்கும் பணிக்காக கடந்த ஓராண்டுக்கு முன்பே எனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் போதுமான மருந்துகள் இல்லாததால் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். ஆனால் மத்திய அரசு போதிய அளவிலான மருந்துகளை மாநிலங்களுக்கு அனுப்பவில்லை என்பது தான் உண்மை.
இந்த மருந்தை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக சொல்கிறார்கள். மாவட்டங்களுக்கு போதுமான மருந்துகள் வந்து சேரவில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த மருந்தை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளில் இருந்து வாங்கி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கான மருந்துகள் இல்லை. இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் மாற்று மருந்துகள் மூலம் இந்த நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.