தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் சமீபத்தில் பெண் ஒருவரை எரித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தருவைக்குளம் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கல்மேடு பகுதியிலுள்ள முள்காட்டில் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி (43) மனைவி முருகலெட்சுமி (36) என்பவர் கடந்த 24.04.2021 அன்று எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சென்று நேரில் பார்வையிட்டு, விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் தருவைகுளம் (பொறுப்பு) காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட நபர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவரது கணவர் முனியசாமி மற்றும் அவரது உறவினர்களுடன் கொலை செய்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் சம்மந்தப்பட்ட நபர்களான முனியசாமி மற்றும் அவரது சகோதர்களான தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன்கள் சங்கர் (29), நீலமேகம் (28), சுப்புராஜ் (எ) பொன்ராஜ் (29) ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர்.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மற்றொரு மகனான சுப்பிரமணியன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நடவடிக்கையின் பேரில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்படி 4 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு நபரான அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுப்பிரமணியன் (32) என்பவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.