குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூபாய் 1,50,000 மதிப்பிலான 126 கிலோ புகையிலை பொருட்கள் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்.
குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையற்கரசி தலைமையிலான போலீசார் இன்று (06.06.2021) உடன்குடி சத்யமூர்த்தி ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் அவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் உடன்குடி கொத்துவா பள்ளி தெருவைச் சேர்ந்த ஜலாலுதீன் மகன் தாவூத் (43) என்பதும், அவர் வெள்ளாளன்விளை கீழத்தெருவைச் சேர்ந்த குணசீலன் மகன் ஜெயசிங் (39) என்பவரிடமிருந்து புகையிலை பொருட்களை வாங்கியது தெரியவந்தது.
உடனே ஜெயசிங் என்பவருக்குச் சொந்தமான கடையில் சோதனை செய்த போது அங்கு 126 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே மேற்கண்ட இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 1,50,000 மதிப்பிலான 126 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புகையிலைப் பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவரைக் கைது செய்து, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.