தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட 94 நபர்களுக்கான ரூ.1 லட்சம் நிவாரண தொகையை கனிமொழி எம்பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. பல்லாயிரகணக்கானோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளை ரத்து செய்யப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அந்தக் கோரிக்கைக்கு தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் மத்திய புலனாய்வுத் துறை வசம் உள்ள வழக்குகள் தவிர பிற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் மற்றும் இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையும் வழங்கும் நிகழ்வானது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைத்து இன்று (5.6.2021) நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு ரூ. 1 லட்சம் நிவாரண தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி.அமிர்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், பொதுக்குழு உறுப்பினர் என்பி.ஜெகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.