ஓட்டப்பிடாரத்தில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் நிலமோசடி செய்யப்பட்ட 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 ஏக்கர் நிலத்தை மீட்டு ஆவணங்களை உரியவரிடம் எஸ்பி ஜெயக்குமார் உரியவரிடம் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் உள்ள 16 ஏக்கர் நிலம் முத்துக்கருப்பன் என்பவருக்கு பாத்தியப்பட்டது. அவர் 1955ம் ஆண்டு காலமாகிவிட்டார், அதன் பிறகு அவரது வாரிசுதாரர்கள் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 31.07.2020 அன்று முத்துக்கருப்பன் உயிரோடு இருப்பது போன்று வேறு ஒரு நபரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து, தூத்துக்குடி தாலுகா பனையூரைச் சேர்ந்த முனியாண்டி மகன் பரமசிவன் என்பவருக்கு போலியாக பொது அதிகாரம் எழுதிக்கொடுத்துள்ளார்.
அதை மேற்படி பரமசிவன் தூத்துக்குடி தாலுகா முள்ளுர் முத்துக்குமாரபுரத்தைச் சேர்ந்த மூக்கையா மகன் முருகன் என்பவருக்கு 06.11.2020 அன்று கிரையம் பேசி போலி கிரைய ஒப்பந்தம் பதிவு செய்து, அதன் மூலம் கிரையம் செய்ய முயன்றுள்ளனர். இந்நிலையில் இறந்து போன முத்துக்கருப்பன் பேரன் சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன் முரளீதரன் (31) என்பவர் 09.11.2020 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவனை உரிய விசாரணை மேற்கொள்ள எஸ்பி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி, உதவி ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு போலியாக பதிவு செய்யப்பட்ட 16 ஏக்கர் நிலத்திற்கான போலி ஆவணங்களை ரத்து செய்து மேற்படி நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட ரூபாய் 32 லட்சம் மதிப்புள்ள மேற்படி 16 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை இன்று (23.11.2020) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் முரளீதரனிடம் ஒப்படைத்தார். மேலும் இவ்வழக்கில் விவேகமாக செயல்பட்டு 16 ஏக்கர் நிலத்தை மீட்டுக்கொடுத்த தூத்துக்குடி நில அபகரிப்பு மீட்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி மற்றும் உதவி ஆய்வாளர் காமராஜ் ஆகியோரையும் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.