புளியம்பட்டி அருகே ஆடுகள் திருடிய இருவர் கைது செய்யப்பட்டு திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
புளியம்பட்டி சிங்கத்தான்குறிச்சி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீரெங்கராமன் மகன் பெருமாள் (48). இவர் தனது வீட்டு அருகே ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று (02.06.2021) அதிகாலையில் இவரது ஆட்டுத் தொழுவத்தில் ஆடுகள் சத்தம் போட்டுள்ளது. இதுகுறித்து பெருமாள் எழுந்து ஆட்டு தொழுவத்திற்கு வந்த போது அங்கு லோடு ஆட்டோவில் வந்த இரண்டு எதிரிகள் பெருமாளின் ஆடு ஒன்றை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்ததில் திம்மராஜாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த முத்துரா மலிங்கம் மகன் மணிகண்டன் (19) மற்றும் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிர மணியன் மகன் சூர்யா (20) ஆகியோர் பெருமாளின் ஆட்டை திருடியதும், மேலும் கடந்த 04.03.2021 அன்று பெருமாளின் ஆட்டு தொழுவத்தில் இருந்து 4 ஆடுகளை திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து புளியம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வன் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்தார்.
மேலும் ஆடு திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து புளியம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.