தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 72 பேரும், கொரோனா தொற்று பாதித்த குழந்தைகள் 361 பேரும் உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஆறுமுகசாமி அன்பு ஆசிரமத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட குழந்தைகளை தங்க வைக்கும் முகாம் அமைத்தல் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று (2.6.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி டுவிபுரம் 4வது தெரு பகுதியில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்த வீடு பகுதியை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு வீடு இழந்த கணேசன், அன்னபாக்கியம் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து இழப்பீட்டு தொகை கணேசன் என்பவருக்கு ரூ.5000, அன்னபாக்கியம் என்பவருக்கு ரூ.4100 காசோலைகளையும், தலா 10 கிலோ அரிசியும் வழங்கினார்.
பின்னர் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்காக கொரோனா பாதுகாப்பு மையம் ஆறுமுகசாமி அன்பு ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதை இன்று பார்வையிட்டோம். மேலும் அடைக்கலாபுரத்தில் உள்ள குழந்தைகள் இல்லமும் மற்றும் பல்வேறு குழந்தைகள் காப்பங்க ளையும் பார்வையிட்டுள் ளோம். இங்கு கொரோனாவால் பாதிக்கப்படும் சிறுவர்களை வைத்து பராமரிக்க சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ளப் பட உள்ளது.
இதுவரை 361 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளார்கள். அவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர் பராமரிப்பிலே சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு சிறார்கள் வந்தால் அவர்கள் பெற்றோருடன் இருக்கவும் அனுமதிக்கப்படும். இங்கு சிறப்பான சிகிச்சையும் வழங்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள். கொரோனாவால் பெற்றோரில் ஒருவரையே அல்லது இருவரையோ இழந்த சிறார்களுக்கு அரசின் சார்பில் ரூ.5 லட்சம் டெப்பாசிட் செய்யப்படும் என்றும், மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்குவதுடன் கல்வி செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்து உள்ளார்கள். இது கொரோனாவால் பெற்றோரை இழந்த சிறார்களுக்கு மிகவும் பாதுகாப்பான திட்டம் ஆகும். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 72 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனர்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பங்களை வருவாய் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் ஆகியோரிடம் வழங்கலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆசிரம பொறுப்பாளர்கள் அன்னசுபா, தினகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.