தூத்துக்குடியில் தூங்கி கொண்டு இருந்தபோது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியானார். படுகாயம் அடைந்த அவரது தம்பிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணத் தொகை வழங்கினார்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் நடராஜன். இவருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் நடராஜன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மற்றொரு வீட்டில் தச்சு தொழிலாளியான ராஜமுருகன் என்பவர் குடும்பத்துடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களுடைய மகள் பரமேசுவரி (வயது 22). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலைக்கு சென்று வந்தார். மகன் பெயர் சுந்தர் (21).
ராஜமுருகன் வசித்து வரும் வீட்டின் மேற்கூரை உட்புறம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்து உள்ளது. அதனை வீட்டின் உரிமையாளர் நடராஜன் கொத்தனார் மூலம் சரி செய்து உள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜமுருகன் மற்றும் குடும்பத்தினர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரையில் உள்புறமாக இருந்த சிமெண்டு பூச்சு பெயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த பரமேசுவரி, அவரது தம்பி சுந்தர் ஆகியோர் மீது விழுந்தது.
இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக 2 பேரையும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே பரமேஸ்வரி பரிதாபமாக இறந்தார். சுந்தர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அருகில் படுத்திருந்த ராஜமுருகனும், அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (2.6.2021) விபத்தில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சுந்தரை நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் கீதா ஜீவன், ராஜமுருகனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஜீவன் ஜேக்கப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.