கன்னடியன் கால்வாய் திட்டப்பணியை 6 மாதத்திற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை என ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், கன்னடியன் கால்வாய் திட்டப்பணிகளை சாஸ்தாவிநல்லூர் விவசாயிகள் நலச்சங்கத்தினருடன் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கன்னடியன் கால்வாய் திட்டம் மூன்று நிலைகளாக பணிகள் நடந்து வருகிறது. இரண்டு நிலைகள் நிறைவடைந்து மூன்றாவது நிலையான ரயில்வே பாலம், குறுக்கு பாலங்கள் கட்டும் பணிகளும், நான்கு வழிச்சாலையில் உள்ள பாலம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது கன்னடியன் கால்வாய் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாதத்திற்குள் விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிகழ்வின் போது, அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், சாஸ்தாவிநல்லூர் விவசாய சங்க தலைவர் காமராஜ், படுக்கப்பத்து விவசாய சங்க தலைவர் சரவணன் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.