தூத்துக்குடியில் காரில் மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்து , அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஊரடங்கு காலத்தில் மது விற்பனை செய்யப்படுகிறதா? என்று காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவில், அதே பகுதியை சேர்ந்த கற்குவேல் மகன் சரவணக்குமார் (வயது 40) என்பவர் காரில் வைத்து சட்டவிரோ தமாக மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக காவலர்கள் சரவணக்குமாரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 165 மதுபாட்டில்களையும், மது விற்பனைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.