தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கு காலத்தை முன்னிட்டு தாளமுத்துநகர் தனியார் மஹாலில் இன்று ( 31.5.2021 ) ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளமுத்துநகர் சோனா மஹாலில் வைத்து இன்று (31.05.2021) சுனாமி காலனி மற்றும் தாளமுத்துநகர் ராஜபாளையத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் 120 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் :
கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி சுற்றித் திரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4020 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உள்ள காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் கொரோனா கால சிறப்பு சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாராவது உதவிகள் தேவைப்பட்டால் 95141 44100 என்ற எண்ணை அழைத்துக் கூறினால் தேவைப்பட்ட உதவிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் இதுவரை உதவி கேட்டு 160 அழைப்புகள் வந்துள்ளனர். உதவிகள் கேட்ட அனைவருக்கும், அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும், முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் அரசு நடைமுறைபடுத்தியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்களாகி நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முடியும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.