தூத்துக்குடியில் இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்து மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி பீச் ரோடு, மத்திய பாகம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சுப்ரமணியன் (54). இவர் தூத்துக்குடி நகர டிஎஸ்பி அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 22ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடி - பாளை., ரோட்டில் மில்லர்புரம் அருகே வேகத் தடையில் பைக் நிலைதடுமாறி விபத்துக்குள் ளானது.
இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ( 30.5.2021) மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அவரது மறைவு குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர்கள் கோபி கார்த்திகேயன், டவுன் டிஎஸ்பி கணேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். விபத்தில் மரணம் அடைந்த உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் சொந்த ஊர் செக்காரக்குடி ஆகும். இவரது உடல் நல்லடக்கம் செக்காரக்குடியில் நாளை (31.5.2021) நடைபெறுகிறது.