தூத்துக்குடி அருகே தனியார் உரத்தொழிற்சாலை முன்பு லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ராக் பாஸ்பேட் சரக்கு பொருளை, தனியார் நிறுவனம் மூலம் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியிலுள்ள தொழிற்சாலைக்கு டிப்பர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்த பணிகளில் குறிப்பிட்ட லாரிகளுக்கு மட்டுமே சரக்கை கொண்டு செல்ல அனுமதி அளிப்பதாகவும், லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் லோடு ஏற்றப்படுவதாலும், எங்களது வாகனங்களுக்கு லோடு எடுத்துச்செல்ல அனுமதி தராமல் பாரபட்சம் காட்டுவதாக, ஒரு தரப்பு லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலை முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன், உதவி ஆய்வாளர் சதீஷ் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்களிடம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மற்றொரு தரப்பு லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கையில் :
நாங்கள் பல ஆண்டுகளாக லாரி தொழில் செய்து வருகிறோம். துறைமுகத்தில் இருந்து சரக்கை ஏற்றிசெல்ல வரும் ஒரு சில லாரிகள் முறைப்படி வரிசையாக வந்து சரக்கை ஏற்றாமல் தகராறில் ஈடுபட்டு தேவையில்லாத பிரச்சனைகளில் ஈடுபடுகின்றனர். ஆகவே அப்படி பட்டவர்களுக்கு நேற்று லோடு தராமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால், இதனை சாதி ரீதியாகவும், அதிக பாரம் ஏற்றுவதாகவும் கூறி பிரச்சனையை வேறு விதமாக திசை திருப்பி தேவையில்லாமல் தொழிற்சாலை முன்பு போராட்டம் பன்னுகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாங்கள் ஏற்கனவே தொழிலில் நஷ்டம் அடைந்து இருக்கும் நிலையில், ஸ்பிக் மற்றும் கோஸ்டல் போன்ற தொழிற்சாலை களுக்கு சரக்குகளை எடுத்து செல்ல எங்களது வாகனம் பயன்படுத்தப் பட்டு வருவதால் ஒரளவு வாழ்வாதாரம் சிரமமின்றி இருந்து வருகிறோம்.
இந்நிலையில், இது போன்ற தேவையற்ற போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, எங்களுக்கு தொழில் செய்ய பாதுகாப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.