தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
திருச்செந்துர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில் கந்த சஷ்டி 2020 விழாவின் போது சிறப்பாக பணியாற்றியதுடன், சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து பணிகளை திறம்பட மேற்பார்வை செய்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வேல்முருகன், தலைமைக் காவலர் சண்முகம் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 05.12.2019 அன்று நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடு போன டாடா சுமோ வாகனம், கோயம்புத்தூரில் இருப்பதை கண்டுபிடித்து 18.11.2020 அன்று கைப்பற்றி காவல் நிலையம் கொண்டுவந்த நாசரேத் காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி, தலைமைக் காவலர்கள் பிரேம் குமார், கணேசன், முதல் நிலைக் காவலர் மணிக்குமரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 17.11.2020 அன்று கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்று வந்த ராஜபாளையத்தை சேர்ந்த எதிரியின் கோவில்பட்டி வருகையை கண்காணித்து அவரை கைது செய்து. அவரிடம் இருந்த பணம் ரூ. 4,13,000/- பறிமுதல் செய்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் சுதாகரன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிரடரிக் ராஜன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், தட்டார்மடம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் மணிகண்டன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் காசி ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
கடந்த 16.11.2020 அன்று எட்டயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழஈராலில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்து ஆயுதத்தை காட்டி மிரட்டிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு எதிரிகளை கைது செய்ய உதவியாக இருந்த தருவைக்குளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் இராமசாமி, புதூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ரவி, தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் மகேந்திரன் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
கடந்த 19.11.2020 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட 3 எதிரிகளை கயத்தாறில் கைது செய்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த கயத்தார் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், தனிப்பிரிவு காவலர் ஆனந்த், காவலர்கள் சீனிவாசன், சின்னத்துரை ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.