கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகபரவிவரும் நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்படுகிறது. இது குறித்த ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகபரவிவரும் நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கலாம். பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம் இதை தவிர்த்து பிற கடைகள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத்துறை மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்று 4,500- சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.
நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடை வீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. காய்கறி கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டமாக கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
பல இடங்களில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் பொருட்களை வாங்க குவிந்துள்ளது நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடைகள், திறப்பு, பேருந்துகள் இயக்கம் போன்றவற்றால் இன்று தமிழகம் முழுவதும் பிரதான சாலைகள் வழக்கம் போல் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்,
- முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்வது
- விவசாய நிலங்களில் விளையும் வேளாண் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு சேர்ப்பது
- மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு நிலவரம்
- அவசர சிகிச்சைக்காக நோயாளிகள் மருத்துவ மனைக்கு செல்வதை உறுதிப்படுத்துவது
- மாவட்டங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாகக் கடைப் பிடிப்பது
உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் ரேவதி பாலன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் வித்யா மற்றும் மாவட்ட, மாநகராட்சி அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.